Thursday, November 29, 2007

என்னடா நடக்குது இங்க....

இந்த வார குமுதத்தில் பெங்களூரில் நடந்த ஒரு கொடூர செயல் பற்றிய பதிவு இது. பெங்களூர் என்றாலே அதன் குறுகிய கால அசுர வளர்ச்சி மட்டுமே நம் கண்முன்னே தெரிகிறது. ஆனால் அங்கு நடக்கும் கலாசார சீரழிவு பற்றிய அதிர்ச்சிகரமான செய்தி இது.

கொடுமை # 1:
பெங்களூரின் முக்கிய பூங்காவான கப்பன் பூங்காவில் மாலை நேரத்தில் ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்த ஒரு 21 வயது இளைஞரை (ஏதோ தனியார் கம்பெனியில் வேலை செய்பவர்) சில கல்லூரி மாணவிகள் அல்லது சில வேலைக்குச் செல்லும் பெண்கள் சேர்ந்து கற்பழித்து உள்ளனர்.

கொடுமை # 2:
அவர் சுயநினைவின்றி இருந்த வேளையில் அங்கு வந்த சில அரவாணிகள் அந்த இளைஞனின் ஆடைகளையும் பணத்தையும் பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

கொடுமை # 3:
அந்த மாணவர் எவ்வளவோ கெஞ்சியும் அந்தப் பக்கமாக சென்ற எவரும் அவர் மானம் காக்க ஆடை கொடுத்து உதவவில்லை.

கொடுமை # 4:
வேறு வழியின்றி அந்த மாணவர் ஆடைகள் எதுவுமின்றி பட்டப் பகலில் பல நெடுஞ்சாலைகளில் நடந்திருக்கிறார். ஊர்மக்கள் அனைவரும் வேடிக்கைப்பார்த்தார்களே தவிர யாரும் அவருக்கு உதவவில்லை.

கொடுமை # 5:
ஒரு வழியாக அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு போக்குவரத்து போலீஸ்காரர் அந்த வாலிபரை நிறுத்தி ஒரு வக்கீலின் உதவியுடன் ஆடை கொடுத்து உதவி உள்ளார். பிறகு காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளார். காவலர்கள் அவரை மனநோயாளிகள் மருத்துவமனையில் சேர்த்து இவர் மீது பொதுமக்களுக்கு பொது இடத்தில் இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்திருக்கிறது.

கொடுமை # 6:
சிறிது நேரம் கழித்து ஒரு நிருபர் ஆஸ்பத்திரியில் விசாரித்துப் பார்க்க அப்படி ஒருவர் அந்த ஆஸ்பத்திரியிலேயே அட்மிட் செய்யப்படவில்லை என்று கூறி விட்டனர். காரணம் இவ்வளவு விஷயத்திற்கும் காரணம் சில பணக்கார வீட்டுப்பெண்களாம்.

இந்தியாவில் சமத்துவம் பெருகி விட்டது. இனி பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் இரவு நேரங்களில் வெளியில் நடமாட முடியாது போல இருக்கிறது.

வாழ்க போலீஸ், வாழ்க இந்தியப்பொதுமக்கள். இதுபோல எவ்வளவோ சீர்கேடுகளுக்கிடையில் முரண்பாடுகளுக்கிடையில் முடிந்தால் வளர்க இந்தியா.

Tuesday, November 20, 2007

மெய்யாலுமா....

குழந்தைகளுக்கு 300 எலும்புகளும் பெரியவர்களுக்கு 206 எலும்புகளும் இருக்குமாம். மனிதன் வளரும்போது 94 எலும்புகள் கரைந்து விடுமாம்.
உலகத்திலேயே மிகவும் கொடிய விலங்கு கொசுதானாம். அதன் நோய் பரப்பும் திறன் வேறு எந்த விலங்கிற்கும் கிடையாதாம்.
கொசுவுக்கு 47 பற்கள் உள்ளனவாம்.
யானை ஒரு நாளைக்கு 2 மணி நேரமே உறங்குகிறது.
லாப்ஸ்டருக்கு ரத்தம் நீல நிறமாம்.
வரிக்குதிரை வெள்ளைக்கலரில் கறுப்பு வரிகள் கொண்டவை.
உலகிலேயே பெரிய முட்டை சுறாமீனின் முட்டை.
முதலையின் நாக்கு மேல்வாயில் ஒட்டி இருக்கும்.
ஒட்டகசிவிங்கியினால் இரும முடியாது.
சுறாமீனுக்கு கேன்ஸர் வராது.
ஒட்டகத்துக்கு முதுகெலும்பு நேரானதாக இருக்கும்.
சிறுத்தை 0 km/hr ல் இருந்து 70 km/hr செல்ல மூன்றே நொடிகள் தான் ஆகுமாம்.
கரப்பான்பூச்சி தலை இல்லாமல் பல வாரங்கள் வாழுமாம்.
எறும்புகள் உறங்குவதில்லை.
ஒவ்வொரு மனிதனின் தலையிலும் சுமார் ஒரு லட்சம் முடிகள் உள்ளன. ஒவ்வொரு முடியும் சுமார் 12.7cm நீளம் ஒரு வருடத்திற்கு வளருமாம்.
எலிகள் தான் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்யும் உயிரினம். இரண்டு எலிகள் அது போடும் குட்டிகள் என 18 மாதங்களில் 1 மில்லியன் வாரிசுகளை உருவாக்க முடியுமாம்.
பாம்புகள் தான் பக்கா "carnivorous" குடும்பத்தை சேர்ந்தது. ஏன் என்றால் அது மட்டும் தான் எவ்வகையான செடிகொடிகளையும் உண்ணாது.
விஷதன்மை இல்லாத பாம்புகள் மட்டுமே உள்ள ஒரே இடம் அமெரிக்காவில் உள்ள மெயின் மாகாணம்.
நீலத்திமிங்களங்கள் 188 டெசிபள் அலைவரிசையில் ஒலி எழுப்பும். இதுவே உயிருள்ளவை எழுப்பும் மிக அதிகமான ஒலி அதிர்வாகும். இது 530 மைல் தொலைவில் இருந்து உணர முடியுமாம்.
தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ள பாய்சன் ஏரோ வகை தவளைகளே உலகில் மிகவும் கொடிய விஷதன்மை உடைய உயிரினமாம்.
நாம் ஒரு வருடத்திற்கு சுமார் 42,00,000 தடவை கண் சிமிட்டுவோம்.
1979ல் அமெரிக்காவின் முதல் விண்வெளி அரங்கம் (space station) ஆயிரமாயிரம் துகள்களாக உடைந்து கடலுக்குள் உடைந்து விழுந்து விட்டது.

Monday, November 19, 2007

குழந்தைகளை சமாளிக்க சில எளிய வழிகள்

உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கிறதா...கவலை வேண்டாம்...இந்த பூச்சாண்டி புகைப்படத்தை காட்டி சோறு ஊட்டவும். பின்னர் பாருங்கள் உங்கள் குழந்தை எப்படி சாப்பிடுகிறது என்று.



உங்கள் குழந்தை எப்பப் பார்த்தாலும் விளையாடிக் கொண்டே இருக்கிறானா...கவலை வேண்டாம்..இனிமேல் இந்த அங்கிள் தினமும் உன் கூட விளையாடுவார் என்று சொல்லிப் பாருங்கள். அப்புறம் எவ்வளவு சமர்த்தாக படிக்கிறான் என்று மட்டும் கவனியுங்கள்.




உங்கள் குழந்தை உங்களை zooவுக்கு கூட்டிப் போக சொல்லி அடம் பிடித்தால், இந்தப் புகைப்படத்தை காமியுங்கள். செலவின்றி அவன் கரடியைப் பார்த்த மாதிரி இருக்கும்.




உங்கள் குழந்தை மீது கண் பட்டு விட்டது என்று கவலையாக இருக்கிறதா?. இந்தப் புகைப்படத்தை உங்கள் வீட்டின் முகப்பில் கட்டி விடுங்கள். உங்கள் குழந்தை மீது பட்ட கண் விலகி விடும்.


மிரட்டல் - 2

எலெக்ட்ரானிக் வாய்ஸ் பினாமினா (EVP) மற்றும் இன்ஸ்ட்ருமென்டல் டிரான்ஸ் கம்யூனிகேசன் (ITC) என்றால் என்ன என்று இன்று பார்ப்போம். மனிதர்கள் போன்ற ஒலிகள் கண்ணுக்குத் தெரியாத பொருள்/இடத்தில் இருந்து பதிவு செய்யும் முறையே EVP அல்லது ITC என்று அழைக்கப்படுகிறது. இவ்வகையான பதிவு செய்த ஒலிகளை கூர்தீட்டி அல்லது வடிகட்டி கேட்டுப் பார்த்தால் அக்குரல்கள் என்ன சொல்கின்றன என்பது தெளிவாகத் தெரியும். பதிவான குரலின் தன்மைப்படி அதை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

க்ளாஸ் ஏ : அனைவராலும் சுலபமாக புரிந்து கொள்ளும் ஒலி.
க்ளாஸ் பி : யாரோ தூரத்தில் இருந்து பேசுவது போன்ற ஒலி.
க்ளாஸ் சி : குசுகுசு என்று யாரோ பேசுவது போன்ற ஒலி.

இவ்வகையான ஒலியை ஆய்வாளர்கள் எவ்வாறு பதிவு செய்வார்கள் என்பது மிக மிக சுவாரஸ்யமானது. இவர்கள் ஆள் அரவமற்ற கல்லறைகளுக்குச் சென்று டேப் ரிக்கார்டர்களை ஆன் செய்து தங்கள் குரலில் முதலில் அன்றைய தேதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்வார்கள். பின்பு இடைவெளி விட்டு சில கேள்விகளை கேட்பார்கள். இவ்வாறு சில மணி நேரங்கள் கல்லறையில் கேள்விகளை கேட்டு பதிவு செய்து விடுவர். இவர்கள் வீட்டுக்கு வந்தபிறகு டேப் ரிக்கார்டரை ஆன் செய்து பார்ப்பர். இவர்கள் கேள்விகளுக்கு சில சமயம் சில பதில்கள் பதிவாகி இருக்கும். இது அவர்கள் கல்லறையில் இருக்கும் போது கேட்டிருக்காது. ஆனால் டேப்ரிக்கார்டரில் பதிவாகி இருக்கும். இது ஒவ்வொரு முறையும் நடக்கும் என்று சொல்ல முடியாது. எப்பொழுதாவது அபூர்வமாக கேட்கும். இவ்வகையாக ஆராய்ச்சி செய்து பதிவு செய்த சில குரல்களை CDயாக்கி ஒருவர் விற்று வருகிறார். யாருக்காவது அந்த CD வேண்டும் என்றால் இங்கு சொடுக்கவும். <<http://www.amazon.com/Voices-Dead-Konstantin-Raudive/dp/B00006AW4X/ref=sr_1_4?ie=UTF8&s=music&qid=1195499503&sr=8-4>>

சரி சரி யார் யார் தயாராக இருக்கீங்க கல்லறைக்குப் போய் EVP முயற்சி பண்ண?. போடாங் கொய்யாலன்னு நீங்க சொல்லுறது எனக்குக் கேட்குது. வர்ட்டா! வணக்கம்.

Wednesday, November 14, 2007

மிரட்டல் - 1

இன்று அமெரிக்க செய்தி இணைய தளமான www.cnn.comல் ஒஹையோ (ohio) மாகாணத்தில் உள்ள ஒரு கேஸ் ஸ்டேசனில் உள்ள ஒரு வீடியோ கருவியில் புதைந்த ஒரு பேயின் உருவம் பற்றிய செய்தி பார்த்தேன். அதன் விவரம் அறிய இங்கு சொடுக்குங்கள் <<http://www.cnn.com/video/#/video/offbeat/2007/11/14/lai.gas.ghost.woio>>.

இதைப் படித்ததும் எனக்குள் இருந்த ஒரு ஆர்வக்கோளாறில் பேய் பிசாசுகள் பற்றிய சில குறிப்புகள் படித்தேன். அதை உங்களுடன் இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த விஞ்ஞான உலகில் இன்னும் பேய் பிசாசு கதையைப் பேசி நேரத்தை வீண் செய்கிறேன் என்று கூறும் அன்பர்கள் இந்தப் பதிவில் உள்ள விசயங்களைப் படித்துவிட்டு உங்கள் யூகத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நான் படித்த முதல் பதிவில் இறந்தவர்களுடன் இந்த எலெக்ட்ரானிக்ஸ் காலத்தில் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று ஒரு பதிவு பார்த்தேன். அதில் இருவகையாக தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி இருந்தது. ஒன்று எலெக்ட்ரானிக்ஸ் வாய்ஸ் பினாமினா (EVP) மற்றொன்று இன்ஸ்ட்ருமென்டல் ட்ரான்ஸ் கம்யூனிகேஸன் (ITC). இந்த இருமுறையில் ஏதாவது ஒரு முறையைப் பயன்படுத்தி இறந்தவர்கள் என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதை டேப் ரிக்கார்டர்கள், வீ.சீ.ஆர்கள், தொலைபேசி,தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கணிணியின் உதவியுடன் பதிவு செய்யலாமாம். இனிமேல் பழைய முறைப்படி ஊஜா (ouija) போர்ட்கள், மீடியம் மற்றும் மனோதத்துவ முறைகளில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை (நான் முயற்சி செய்வேன்னு நினைக்கறீங்க...சான்ஸே இல்லை. யாராவது சொந்த செலவில சூனியம் வச்சுக்குவாங்களா...நீங்களே சொல்லுங்க :-)).
இந்த வகையில் பதிவு செய்த இறந்தவர்களின் குரல்களை ஒரு CD யாக மாற்றி அமேஜான்.காம் இணைய தளம் விற்பனை செய்து வருகிறது. இதை வாங்க விரும்புவோர் இங்கு சொடுக்குங்கள்.<<http://www.amazon.com/Voices-Dead-Konstantin-Raudive/dp/B00006AW4X/ref=sr_1_1?ie=UTF8&s=music&qid=1195067956&sr=8-1>>
EVP மற்றும் ITC பற்றி விரிவான விவரங்களை அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.
(பரவாயில்லைடா அருண் தொடர்ச்சிப் பதிவு எழுதுற அழவுக்கு தேறிட்ட...கங்கிராட்ஸ்...எனக்கு நானே சொல்லிக்கிறேன்).

------மிரட்டல்கள் தொடரும்......

Monday, November 12, 2007

என்ன கொடுமை சார் இது?.

இவர் பொண்டாட்டி உண்மையாகவே நாய் மாதிரி கத்துவாங்க போல இருக்கு!!!!

மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.




மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு `உல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. `இறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. `செல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு `பன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், `நான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார்.

Friday, November 9, 2007

யோசிச்சுப் பார்த்தா !!!!

உலகத்துல இருக்கிற எல்லா நாட்டுக்குமே(அமெரிக்கா உட்பட) கடன் இருந்தா, எல்லாப் பணமும் எங்கப் போச்சு?.

நாய் பிஸ்கட் ரொம்ப சுவையா இருக்கும்னு சொன்னா, அந்த பிஸ்கட்டை யாரு தின்னுப் பார்த்து இருப்பாங்க..

ஏர்பிளேன்ல கருப்புப் பெட்டில இருக்கிறது என்ன செஞ்சாலும் அழியாதுன்னா, ஏன் ஏர்பிளேனையே கருப்புப் பெட்டில செய்யக் கூடாது?.

தண்ணிக்குள்ளே அழ முடியுமா?.

நாய் மாதிரி உழைக்கிறேன்னு ஏன் மக்கள் சொல்றாங்க?. நாய் சும்மாதான உட்கார்ந்து இருக்குது.

கீபோர்ட்ல இருக்கிற நம்பர் பேட்ல ஏன் நம்பர் தலைகீழாக இருக்கு?.

மீனுக்கு தண்ணி தாகம் எடுக்குமா எடுக்காதா?.

ரவுண்ட்டா இருக்கிற ரூம்ல நீ எந்த மூலைல உட்கார்ந்து அழுவ?.

ஆரஞ்சு கலர் மொதல்ல வந்துச்சா இல்லை ஆரஞ்சு பழம் மொதல்ல வந்துச்சா?.

கார்ன் ஆயில் கார்ன்ல இருந்து வந்துச்சு. வெஜிடபிள் ஆயில் வெஜிடபிள்ல இருந்து வந்துச்சு. அப்ப பேபி ஆயில் எங்க இருந்து வந்துச்சு?.

லேடிபேர்ட் அப்படின்னு ஒரு பறவை இருக்கு. ஆம்பளை லேடிபேர்ட்டை என்னன்னு கூப்பிடுவாங்க?.

அம்னீசியா பேஸன்ட்டுக்கு நல்லா ஆயிடுச்சுன்னா தனக்கு அம்னீசியா இருந்தது நினைவிருக்குமா இல்லை மறந்துடுமா?.

"பில்ட்" பண்ணின ஒரு கட்டிடத்தை ஏன் "பில்டிங்" னு சொல்லுறோம்?.

நீ சவுண்ட் வேகத்துக்கு பறக்கிறப்ப ரேடியோ ஆன் பண்ணினா சவுண்ட் கேட்குமா இல்லை கேட்காதா?.

அதேமாதிரி, நீ லைட் வேகத்துக்கு பறக்கிறப்ப டார்ச் லைட் ஆன் பண்ணினா என்னாகும்?.

டீவி ஒண்னு மட்டுமே இருக்கும்போது அதை ஏன் டீவி செட்டுன்னு சொல்லுறோம்?.

உனக்கு சொந்தமான நிலம்னா எவ்வளவு ஆழத்துக்கு உனக்கு சொந்தம்?.

குடிச்சுட்டு வண்டி ஓட்டக் கூடாதுன்னா பார்ல ஏன் பார்க்கிங் லாட் இருக்குது?.

ஒன்னுமேப் புரியலை............................

Wednesday, November 7, 2007

நூத்துல ஒன்ணு !!!

" உன்னோட எல்லா சொத்தும் தீர்ந்த பின்னாடி
உனக்கு எவ்வளவு மதிப்போ - அது தான்
உன்னோட சரியான மதிப்பு "

எவ்வளவு ஆத்மார்த்தமான உண்மை.

Thursday, November 1, 2007

மலரும் நினைவுகள்.

இன்னைக்கு மத்தியானம் திடீர்னு ஆபீஸ்ல எல்லாரும் சாப்பிட வெளியப் போனோம். சாப்பாடு முடிஞ்சதும் எங்க மேனேஜர் அம்மணி அவுங்க பையன் கல்யாண வேலை விசயமா வீட்டுக்குப் போயிட்டாங்க. நான் பாட்டுக்கு தனுஷ் நடிச்சு இருக்கிற "பொல்லாதவன்" படப் பாடலை என் கார்ல போட்டு வண்டி ஓட்டிட்டு வந்தேன். அப்பப் பார்த்து எங்க கல்லூரி நண்பர்கள் எல்லாரும் என் மனசில வந்தாங்க. அவுங்க எல்லாரோட பட்டப் பெயரையும் நினைச்சுட்டு வந்ததுல எனக்கு ஒரே சிரிப்பு. அவுங்க பேரை எல்லாம் திரட்டி கீழ குடுத்து இருக்கேன் நீங்களேப் பாருங்களேன்.

கொட்டைப் பாண்டி - இவரு பெரிய ரஜினி பேஃன். ரஜினி கழுத்துல கட்டி இருக்கிற மாதிரியே இவனும் தன் கழுத்துல உருத்திராட்சை கட்டி இருப்பான். இவனோட மேனரிசம் எல்லாமே ரஜினி மாதிரியே இருக்கும்.

நாய் மாமா - இவன் வீட்டுல நாய் வளர்க்கிறான். அந்த நாய்க்கு எல்லாமே இவன்தான். இன்னும் சொல்லப் போனா ஒரு தாய் மாமா மாதிரி. அதுனாலதான் அவனுக்கு இந்த பேரு.

கேப்டன் - விஜயகாந்த் ரேஞ்சுக்கெல்லாம்(?!?!!?!) கற்பனை பண்ணிப் பார்க்காதீங்க. பசங்க எல்லாரும் சேர்ந்து எங்கேயாவது கட் அடிக்க ப்ளான் போட்டோம்னு வையுங்க, இவரு ஏதாவது பண்ணி எப்படியாவது கவுத்துடுவாரு. அந்த டைம்ல தான் டைட்டானிக் படம் வந்துச்சு. அந்த கப்பலைக் கவுத்த கேப்டன் பேரையே இவனுக்கும் வச்சிட்டோம்.

பேரி - இவரு கழுத்துல இருந்து கால் வரைக்கும் நேர் கோடு போட்ட மாதிரி இருப்பான். அதனால பேரல்னு பேர் வச்சோம். அந்தப் பேரே மருவி பேரி ஆயிடுச்சு.

கவரை - இந்த நண்பனோட ஊர் பேர் கவரைப்பாளையம். அதோட சின்ன பேருதான் கவரை.

ஆட்டுதாடி - லைட்டா மீசை மொளைக்கிற காலத்துல இவரு பிரெஞ்சு பியர்ட் தாடி வைக்க ஆசைப்பட்டு ஒரு தாடி வச்சு இருந்தான். அது அப்படியே ஆட்டு தாடி மாதிரியே இருந்ததுனால இந்தப் பேர்.


காசி கேங்- கண் சரியாக தெரியாத பசங்களுக்கு இந்த பேர்.

MTV கேங்- மூணுப் பொண்ணுங்க பார்க்க சுமாரா இருந்தாளும் என்னமோ பியூட்டி பரேட் போற மாதிரிதான் காலேஜுக்குள்ள நடப்பாங்க. ஒருத்திப் பேர் மெல்ஃபி, இன்னொரு பொண்ணு பேரு டீனா, இன்னொன்னு பேரு வந்து வீணா. இதுங்க மூணு பேரோட முதல் எழுத்தை வச்சு வச்ச பேர் தான் MTV கேங்.

ராஜபாளையம்/மஞ்சப்பை/வுய்யா - இவரு ஊரு ராஜபாளையம். அதுனால தான் இவனுக்கு இந்த பேரு.

தலை - இவரு பாட்டுக்கு காலேஜுக்கு வருவாரு. போவாரு. யாரு கிட்டயும் பேச மாட்டாரு. வாத்தியாருங்க கூட இவருகிட்ட பேச பயப்படுவாங்க.

ட்ராவிட் - இவனுக்கு கிரிக்கட்ல தெரியாத விசயமே கிடையாது.

ஸுப்பர் சிக்ஸ்/5 ஸ்டார்/பெண்டாஸ்டிக் போஃர்/மூதேவி - என் க்ளாஸ்ல இருந்த க்லோஸ் பிரண்ட்ஸ் கேங் பேரு இது. ஒரு ஒரு பொண்ணா குறைய குறைய பேரு மாறிக்கிட்டே இருந்தது.

தடி - அய்யா ஒரே ஆள் 2 லிட்டர் பெப்ஸி குடிப்பாரு. நல்ல உடம்பு. அதுனால தான்.

பேஸண்ட் - இவனுக்கு அடிக்கடி உடம்புக்கு சரி இல்லாம போயிடும்.

யாமினி புருசன் - யாமினிங்கிற பொண்ணு கூட வச்சு இந்தப் பையனை ஓட்டுவோம்.

பொணம் - ஆள் நல்லா ஒல்லியா பொணம் மாதிரியே நடப்பான். அதுதான்.

டிஜி - இவரு டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் புளி. அது மட்டும் இல்லாம இவரு கண் டிஜிட்டல் எபெஃக்ட்ல இருக்கும்.

நக்கி - ரோட்டுல விக்கிற 50 ரூபாய் NIKE வாட்ச் போட்டதுனால இந்தப் பேர். (இது நாந்தாங்க).

ஜக்- தேவி ஜகதீஸ்வரிங்கிற பேரு தான் இப்படி ஆயிடுச்சு.

ஜக்கம்மா - எதுக்குன்னு தெரியலை. ஓருப் பொண்னை இப்படித்தான் க்ளாஸ்ல கூப்பிடுவாங்க.

ரவுடி - எப்பப் பார்த்தாலும் இந்தப் பொண்ணை சண்டைக்கு கூப்பிடுவோம்.

ஆண்ட்டி - இந்தப் பொண்ணு கொஞ்சம் குண்டாக இருப்பா. அதுனால ஆண்ட்டின்னு கூப்பிடுவோம்.

சொம்பு - எங்க சிவில் இன்ஜினியர் சார் பேரு.அவரு வாயப் பார்த்து வச்சது.

பீட்டர் மாமா - எங்க இங்கீலீஸ் ப்ரொபஸர் பேரு.

ஆயாம்மா - 1- MCA ப்ரொபஸர் பேரு.

ஆயாம்மா - 2- எங்க டிப்பார்ட்மெண்ட் ப்ரொபஸர் பேரு.

பேதிபாபு - ஜோதிபாபுங்கிற ப்ரொபஸர் பேரு.

னொள்ளக் கண்ணன் - முத்துக்கண்ணன்ங்கிற ப்ரொபஸர் பேரு.

ஒற்றரைக் கொம்பு - ஒல்லியா இருக்கிற ப்ரொபஸர் பேரு.

வாத்து மடையன்- ரவிங்கிற நன்பண் பேரு. இவனுக்கு மேக்ஸ் வராது.

சொட்டை - சொட்டை விழுந்த சார் ஒருத்தர் பேரு.

இந்தியன் தாத்தா - எங்க பிரின்ஸ்பால் பேரு.

தம்பி - கிராப் வெட்டுன பொண்ணு பேரு.

சைக்கோ - எங்க பிஸிக்ஸ் ப்ரொபஸர் பேரு.

மொகமது கஜினி - சாகர்னு ஒரு நண்பன். 20+ அரியர்ஸ் வச்சு இருந்தான். அவன் பேரு தான்.

தக்காளி - MCA டிப்பார்ட்மெண்ட்ல்ச் ஒரு பொண்ணுக்கு நாங்க வச்ச பேரு.

சயிண்டிஸ்ட் - இவனுக்கு தெரியாதது எலெக்ட்ரானிக்ஸ்ல எதுவுமே இல்லை.

தொப்பை பிள்ளையார் - இது இன்னொரு குண்டா இருக்க பையனுக்கு வச்ச பேரு.

பெள்ளி டேன்ஸர் - விவேக்னு ஒரு பையன் வயத்தை ஆட்டி ஆட்டி ஆடுவான்.


இப்படி வரலாறுல பதிய வேண்டிய பேருங்க சும்மா போயிட கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல தான் இந்த பதிவு. சுமார் 5 வருஷம் ஆச்சு இஞ்சினியரிங் முடிச்சு. இன்னும் இந்த நினைவுகள் பசுமையா என் நெஞ்சுல இருக்குது. ஹும். இன்னொரு வாட்டி கிடைக்குமா அந்த கல்லூரி வாழ்க்கை.

Wednesday, October 17, 2007

என்ன பொருத்தமடி உனக்கும் எனக்கும்

நீ சைவப் பேர்வழி
நான் அசைவப் பிரியன்
நீ ஒரு அடியை இரு
நொடியில் கடப்பாய்
நான் இரு அடியை ஒரு
நொடியில் கடப்பேன்
உனக்குப் படிப்பு பின்பு
சிறு விளையாட்டு
எனக்கு விளையாட்டு பின்பு
முடிந்தால் சிறு படிப்பு
உனது நட்பு வட்டாரம்
மிக மிக சிறிது
எனது நட்பு வட்டாரமோ
பரந்து விரிந்தது
நீ "கடமையை செய்
பலனை எதிர்பாராதே" பெண்
நானோ சிந்திய வேர்வைக்கு
உரிமைக் கேட்கும் ஆண்
இப்படிப் பல விசயங்களில்
நீ வேறு நான்
வேறாக இருப்பினும்
காந்தத்தின் இரு
வேறு விசைகள்
ஈர்ப்பதைப் போன்றும்
இரு வேறு கைகள்
ஒரு ஒளியினை
எழுப்புவது போலவும்
என்னுடைய இன்னொருப்
பாதி நீயாகவும்
உன்னுடைய இன்னொருப்
பாதி நானாகவும்
இருப்பதே சாலச் சிறப்பு
என்பதை இன்று
உனர்ந்தேனடி என் உயிரே!!!

Tuesday, October 9, 2007

முற்பகல் செய்யின்...

சும்மாங்க..."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" அப்படிங்கிற பழமொழிக்கு இப்ப திடீர்னு அர்த்தம் புரிஞ்சுது. அது தான் அப்படியே இங்க ஒரு பதிவு போடலாம்னு....

ஆது ஒன்னும் இல்லீங்க. நம்ம நேத்து "சமைச்சு" சாப்பிட்டதோட எபெக்ட் இன்னைக்கு வரைக்கும் இருக்குது பாருங்க அது தான்...வேறொன்னும் இல்லை.

திருமணம் எனும் மந்திரம்...




திருமணம்

ஒரு இலக்கல்ல

எட்டிப் பிடிக்க

அது நல்வாழ்விற்கோர்

அகல் விளக்கு

அது என்றும்

அனையாது ஒளிவிட

இருகை சேர்ந்து

ஒளி காக்க வேண்டும்

அதற்கு பெரியோர்கள்

சேர்ந்து நல்வழி

காட்ட வேண்டும்.

நான் இதை கவிதைன்னு சொல்லலை..




தோழி...

எனக்கு நீ

உனக்கு நான்

சிற்சில தருணங்களில்

நண்பர்களாக உதவினோம்

அதை நினைக்கும்போது

சிற்றின்பத்தில் என்

உள்ளம் சிலிர்க்கிறது...



இனி...

வாழ்நாள் முழுதும்

நாம் இருவரும்

தோழனுக்கு தோழியாய்

தோழிக்கு தோழனாய்

வாழ்கின்ற வாழ்வை

நினைத்தால் நெஞ்சில்

பேரின்ப வெள்ளம்

பெருக்கெடுத்து ஒடுதடி!!

Friday, October 5, 2007

கிறுக்கல்!


உன் நெற்றியில் செந்நிறப் பொட்டு

பார்த்து இன்று என் நெஞ்சினில்

முளைத்தது ஒரு காதல் மொட்டு



உன் இரு துறுதுறு கண்களில்

ஒரு சிறு குறுகுறுப் பார்வையில்

உடைந்தது என் உள்ளக் கண்ணாடி


உன் பார்வையை என்மீது பதித்து

உன் நினைவை என் நெஞ்சில் விதைத்து

நெருப்பின்றி என் தேகம் எரித்தாய்


என் ஆண்மையை ஆளுமை செய்யும்

புருவம் எனும் வில்லை வளைத்து

பார்வை எனும் அம்பெய்து எனைக் கொல்!.


Tuesday, September 25, 2007

கடவுள் பற்றி காமராஜர்........

தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெ ருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந் தன. கோயில் கோபுரத்திலெல் லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களை யெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயி ருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் ண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங் கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபா ராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக் கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக்கூடாதில்லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!” என்பார்.தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக் கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ் வளவு காலமா இந்தக் கோயி லுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா...? எந்த வருஷத்து ப°ஸு (க்ஷரள)? எத்தனை கிலோமீட்ட ருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம் பித்ததும் குருக்கள் உள்பட எல் லோரும் ஆடிப் போனார்கள். தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண் ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழ மாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புன°காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காம ராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர். தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும்.இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப் பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலை வர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச் சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.“கடவுள்னு ஒருத்தர் இருக் கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”“ இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண் ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபி ஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...?” என்றார்.நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலி ருக்கே...” என்று ஆரம்பிக்கவும். அவரே, “அக்னாடி°ட்டுன்னு” சொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவ லைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேற ணும்னுதானே ஒவ்வொரு மடாதி பதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...?” என்று கேட்டார்.”நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக் கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட் டாரே...?” என்றேன்.“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண் ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!” என்றார் காமராசர்.எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா.....? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழுநாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை...?” என்று கேட்டேன்.“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்னென்°” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத் திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...! தனிப்பட்ட முறை யில நான் கோவில், பூஜை, புன°காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில் லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....?’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந் தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ் டியாவாவது வளருமால்லியா...?”“பதினெட்டு வருஷமா மலைக் குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக் குப் பி.ஹெச்.டியா கொடுக்கி றாங்க...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்.பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் °டேடசு’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலாமில்லியா....” ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன் னா.... மனுஷன் என்னிக்கு உருப்படறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகாதாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்.....? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?”தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.“அப்படியானா.... நீங்க பல தெய்வவழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா....?” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்... “லட்சுமி, சர°வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபல மான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதி லேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறி°தவ மதத்தி லேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக் கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்....? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிர° - கம்யூ னி°ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா...? அவன் கஷ்டங்களப் போக்குமா...? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு...? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா... நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே...! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே....! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்த மான முடிவை அவர் வைத்திருப்ப தைப் பார்த்து நான் வியந்தேன்.“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவு ளாக்கிட்டேன்னேன்....! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயக னுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறா னில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப் பட்டிருக்கிற விஷயங் கள எடுத்துக்கணும். ஆசாமிய ட்டுபுடணும்.” ....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக் கள் ராமனை, கிருஷ்ணனைக்கும் பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத் திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங் கள அடிமையா ஆக்கிவச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சர° வதி பூஜை பண்றான். விக்னே° வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களை யும் தன்னோட மதத்தின் பிடிக் குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவிள கொண் டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுன துமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...” என்று விளக்கினார். “மதம் என்பதே மனிதனுக்கு அபின்...!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போன தில்ல. மனிதனைச் சிந்திக்க வைக் காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழி யில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டி யல்ல கொண்டு போய்க் கொட் றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக் கையை வளர்த்திருக்கா? படிச்ச வனே அப்படித்தான் இருக்கான் னேன்....” என்றார்.“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவ முண்டா...? அதிலேருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் ‘பார்பர் ஷாப்’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப் பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.“அப்படியானா... மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....?” என்று கேட்டேன்.“அடுத்த மனுஷன் நல்லாருக் கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த் தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...!” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.-சொன்னவர்:-திரு. சீர்காழி பெ. எத்திராஜ்முன்னாள் மேலவை உறுப்பினர்.

courtesy : http://arivagam.blogspot.com/2006/12/blog-post_116512075309488909.html

Friday, September 21, 2007

ஒன்னுமே புரியலை........


கோவையில் போலீஸ் நாய்கள்(சரியாக படிக்கவும்) பணி ஒய்வு பெற்றன. அதற்காக போலீஸ் கமிஷனர் வேட்டை நாய்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.




எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். இந்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டு இந்த நாய்கள் என்ன செய்யும்?. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுமா?. தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் புது வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்குமா?. இது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....ப்ளிஸ்.....

Friday, September 14, 2007

ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள்?.

பார்க்கும்போதும், கேட்கும்போதும், பேசும்போதும், நினைக்கும்போதும் ஒரு பெண்ணைப் பற்றி உண்டாகும் அபிப்ராயங்களே அவளது அழகை தீர்மானிக்கின்றன.
ஓரு பெண்ணைப் பற்றி எப்போதும் நல்லவிதமாகவே கேள்விப் பட வேண்டும். அது அவளின் குணத்தின் அழகு.
ஒரு பெண்ணைப் பார்க்கும்போது கண்ணியமான எண்ணம், எதிரில் இருப்பவர்களுக்கு வர வேண்டும். அது அவள் பழகும் அழகு.
ஒரு பெண்ணுடன் பேசும்போது அவளின் பண்பு, அவளின் அன்பு, அவளின் அறிவு, அவளின் ஆளுமை என ஒரு படிமம் உருவாகுமே, அது தான் மொத்த அழகு!
மழை நேரத்தில் நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து சிறு ஓடை உருவாவது போல, அவளைப் பற்றிய சம்பவங்கள் ஒன்று சேர்ந்து நம் மனதை நனைக்க வேண்டும். அப்படி ஈர நினைவுகளை உண்டாகும் ஒவ்வொரு பெண்ணுமே அழகிதான்!
நுணுக்கமாக உருவாக்கப்பட்ட மிக அழகிய சிற்பம் நம்மை வசீகரித்தாலும், சில நிமிடங்களில் அலுத்துவிடும். காரணம் அது நம்மோடு எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்தாத பெண்ணும் அப்படித்தான்...எத்தனை அழகியாக இருந்தாலும், அவள் ஒரு சிற்பம் மட்டுமே!.
அழகு வழியும் பெண்கள் பலரைப் பார்த்து இருக்கிறேன். அவர்களையே ஓர் ஒளிப்பதிவாளராக கேமராவின் வழியே பார்க்கும்போது மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள். எங்கே சென்று ஒளிந்து கொள்கிறது அவர்களின் அழகு?. மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்து, கருவிகளின் உதவியால் பேரழகாக மாறும் பெண்களும் இருக்கிறார்கள். எங்கிருந்து ஒட்டிக் கொள்கிறது அந்த புது அழகு?.
எந்தப் பெண்ணும் நிரந்தர அழகி அல்ல என்பது கோணம் உணர்த்தும் பாடம். இறந்து பத்து ஆண்டுகள் ஆனாலும், இன்னும் நினைவில் நிற்கிறார் டயானா. அவரின் அழகு எது?. உரிமைகளுக்காகப் போராடிய டயானா, உரிமைகள் கிடைத்தப் பிறகு, தனிப்பட்ட வாழ்வில் தவறுகள் செய்ய ஆரம்பித்தார். ஆனால் அதை ஒரு நாளும் மறைத்ததில்லை. 'இந்த வாழ்க்கை எனக்குத் தேவை' என்று எல்லோருக்கும் அறிவித்தார். அதுதான் இன்று வரை அவரை மக்களின் இளவரசியாக வைத்திருக்கிறது.
பல பெண்கள் ரசனையாக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணாடியைப் போல இருக்கிறார்கள். துன்பம் வரும்போது உடைந்து விழுகிறார்கள். மாறாக, எதிர்த்து நிற்பவளே அழகி. தவறுகளை ஒப்புக்கொள்கிற, நம்புபவர்களுக்கு வெளிப்படையாக நடக்கிற, விழுந்த பின்பும் எழுந்து நிற்கிற எந்தப் பெண்ணும், எக்காலத்துக்கும் அழகிதான்!!!!

- ராஜுவ் மேனன்

Courtesy - Vikatan.com

Friday, August 24, 2007

இன்று என்ன சமையல்

அவன் டாக்டரிடம் சொன்னான், "டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?"டாக்டர், "நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு 'இன்று என்ன சமையல்?' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்" என்றார்.அவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து "இன்று என்ன சமையல்?" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, "இன்று என்ன சமையல்?" என்று கேட்டான்.அவள் சொன்னாள், "ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் 'மீன் குழம்பு'ன்னுட்டு".

Courtesy : Jokes world

Wednesday, August 22, 2007

படித்ததில் பிடித்தது.....ஒரு தெரு நாயின் அடி மனதிலிருந்து

வணக்கம். 'லொள்'ளாயிருக்கீங்களா, sorry நல்லாயிருக்கீங்களா? நான் தான்ங்க உங்க தெருவில குப்பைத் தொட்டி பக்கத்துல குடியிருக்கிற நாய் நாகராஜன். ரொம்ப நாளா என் மனசுல பூட்டி வைச்சதெல்லாம் இப்ப உங்க கிட்ட அவுத்து விடுறேன்.என்ன வாழ்க்கைங்க இது? நாய்ப் பொழைப்பு பிழைச்சுக்கிட்டு இருக்கேன். “நாய் நன்றியுள்ள ஜீவன்” என்று நன்றிக்கு எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க, அப்புறமா யாரையாவது திட்டும் போது, “நன்றி கெட்ட நாயே”ன்னு திட்டுவாங்க. என்னங்க இது நியாயம்."இளமையில் கல்"ன்னு அவ்வைப் பாட்டி சொன்னாங்க. ஆனால் எங்களுக்கு இளமையிலும் சரி, முதுமையிலும் சரி,'கல்'தான் எங்களை அடிக்க உதவும் யுதம். கல் எனப்படுவது எதோ நாய்களை அடிப்பதற்கென்றே கடவுள் உருவாக்கியதாக இந்த மனிதர்களுக்கு நினைப்புங்க. "கல்லைக் கண்டா நாயைக் காணும்; நாயைக் கண்டா கல்லைக் காணும்" என்று பழமொழி வேற, ஹ¤ம்!எங்க அப்பா, தாத்தா காலத்தில எல்லாம், மக்கள் உட்கார்ந்து நிதானமா சாப்பிடுவாங்க. இப்ப தான் fast food கலாச்சாரம் வந்து எல்லாம் எங்களை மாதிரி நின்னுக்கிட்டே சாப்பிடுறாங்க. அதனால எனக்கு என்னன்னு கேட்கிறீங்களா? விஷயம் இருக்கு. ஒரு நாள் மழைக்கால சாயங்கால நேரம், பக்கத்து வீதியில குடியிருக்கிற ஜிம்மியை சைட் அடிச்சுட்டு வேகமா ஓடி வந்திட்டிருந்தேன். மழைக்காலம் வேறயா, இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லலாமுன்னு, பக்கத்துல இருந்த போஸ்ட் கம்பத்தில கால தூக்கி அடக்கி வச்ச அவஸ்தைய தீர்த்துட்டு மெதுவா நடந்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது அது போஸ்ட் கம்பமில்லை, fast food சாப்பிட்டு கொண்டிருந்த உயரமான ஒருத்தனோட காலுன்னு, தன் கறுப்பு பேண்ட் ஈரமானதுல கடுப்பான அவன் விட்டான் பாருங்க ஒரு உதை, அதில இருந்து, கழுத்து வலிச்சாலும் நிமிர்ந்து பார்த்து அது போஸ்ட் கம்பமா என்று உறுதிப்படுத்திட்டு தான் காலைத் தூக்கிறதே.என்னமோ நாங்க கடிக்கிறதால மட்டும் தான், ரேபீஸ் நோய் பரவுர மாதிரி ஒரு பிரம்மைய உருவாக்கிட்டாங்க. ஏன் பூனை, குரங்கு, வவ்வால் கடிச்சா கூட தான் ரேபீஸ் வரும். ஒரு மனுஷனைக் கடிப்பதற்கு முன்னாடி நாங்க எவ்வளவு பயப்பட வேண்டியிருக்கு தெரியுமா? மனுஷ ரத்தத்தின் மூலமாத் தான் எவ்வளவோ நோய்கள் பரவுதே. சரி, தெருவில தான் இப்படி நாய் படாத பாடு படுறோம். ஏதாவது வேலைக்குப் போகலாம்னு போலீஸ் நாய் கிடலாம்ன்னு போனேங்க. ஆனா பாருங்க எங்கிட்ட போலீஸ்ல சேருவதற்கு தகுதி, அதாங்க ‘தொப்பை’ இல்லைன்னுட்டாங்க.மனுஷங்களுக்குள்ள தான் ஜாதி, மதம் என்று அடிச்சுக்கிறாங்கன்னா எங்களுக்குள்ளயும் ஜாதியை நுழைச்சுட்டாங்கப்பா. பஞ்சை உருட்டி வச்ச மாதிரி, வெள்ளை உடம்பில இங்க் தெளிச்ச மாதிரி இருக்கிற காவல் காக்காத உதவாக்கரை நாய்கள் எல்லாம் உயர்ஜாதியாம். அதுங்களுக்கு வேலையே ஏ.சி. ரூம்ல, வேளாவேளைக்கு “Pedigree” சாப்பிட்டு, காரில் ஜன்னல் வழியா தலை நீட்டி ஊர்சுற்றிட்டு, எஜமானர்கள் கிட்ட போய் குழைவது தான். நாங்க மழை, வெயில்ன்னு பார்க்காம தெருவில அலைஞ்சு, கார்ப்பரேஷன் காரங்க கண்ணில படாம, நீங்க வேணாம்னு தூக்கிப்போடறதையெல்லாம் சாப்பிட்டு, அதுக்கு நன்றியா தெருவுக்கு காவலா இருந்தா, நாங்கெல்லாம் கீழ்ஜாதி நாட்டு நாய்களாம்.என்னங்க பண்றது. எங்க வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், இந்த மனுஷங்களைத் திருத்த முடியாது. இருந்தாலும் இந்தியாவுல பொறந்ததற்கு சந்தோஷப்படுறேங்க. ஏன்னு கேக்குறீங்களா? தாய்லாந்துலயோ, கொரியாவுலயோ பிறந்திருந்தா, இந்நேரம் ‘நாய் நைண்டி பைவ்” கியிருப்பேன் இல்லையா.நன்றி - விக்னேஷ் ராம்

சும்மா கிறுக்கள்.......

அன்பே,
நான் மகான் அல்ல..
வெறும் மனிதன்
உன்னை பார்த்த பின்பு
மெல்ல திறந்தது (என் உள்ளக்)கதவு...

அழகிய தீயே
உன்னை கண்ட நாள் முதல்
என் நெஞ்சினிலே
எழுந்தது காதல் கோட்டை

என் இதயத் தாமரையே
பூவெல்லாம் உன் வாசம்
உன் நினைவிருக்கும் வரை
என் உள்ளம் கொள்ளை போகுதே

வா திருடா திருடி ஆடலாம்
என்னை விரும்புகிறேன் என்றால்
காதல் பரிசாக உன்
உள்ளத்தை அள்ளித் தா !!!!!!!!!!

Thursday, August 16, 2007

எங்கேயோ சுட்டது!!!!! எனக்கு பிடித்தது!!!!

ஆசிரியர் : (ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து) இதன் ஒளி எங்கிருந்து வந்தது?

மாணவன் : (மெழுகுவர்த்தியை ஊதி அனைத்து) இந்த ஒளி எங்கே போனதோ அங்கிருந்து தான் வந்தது.

_______________________________________________________________

ஆசிரியர் : நான் வரும் போது ஏன் சிரித்தாய்!!!!

மாணவன் : துன்பம் வரும் போது சிரிக்கனும்னு நீங்க தான சார் சொன்னீங்க.

ஆசிரியர் : !?!?!?!?!?!?!!!!!

_______________________________________________________________


பொருத்தமான விளம்பரம் :(பெண்கள் கல்லூரி முன்பு)
"இது விபத்து பகுதி"

என் இனிய கணி(ன்)ணி நீ !!!!!

நான்கு சுவர்கள்...
நடுவில் நான்
எனது கைகள்
உன்னை தீண்டியதும்
பிரகாசமாய் நீ
சூரிய உதயம் முதல்
சூரிய அஸ்தமனம் வரை
உன் மடியில் நான்
இருந்தும் வாழ்க்கை
அலுக்கவில்லை
கேட்பவை எல்லாம்
அமுத சுரபி போல்
முகம் கோணாமல்
கொடுத்தாய்
என் வாழ்வின் ஒரு
பகுதிதான் உனக்கு கொடுத்தேன்
நீ எனக்கு வாழ்க்கையே
கொடுத்தாய்
என் இனிய கணி(ன்)ணி நீ !!!!!

Wednesday, August 15, 2007

!!!!இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!

!!!!இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!!
இந்த இனிய நன்னாளில் நான் முதன் முதலாக தமிழில் தட்டச்சு பழகியதை மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
!!!!!! ஜெய் ஹிந்த் !!!!!! !!!!வந்தே மாதரம்!!!!!