பார்க்கும்போதும், கேட்கும்போதும், பேசும்போதும், நினைக்கும்போதும் ஒரு பெண்ணைப் பற்றி உண்டாகும் அபிப்ராயங்களே அவளது அழகை தீர்மானிக்கின்றன.
ஓரு பெண்ணைப் பற்றி எப்போதும் நல்லவிதமாகவே கேள்விப் பட வேண்டும். அது அவளின் குணத்தின் அழகு.
ஒரு பெண்ணைப் பார்க்கும்போது கண்ணியமான எண்ணம், எதிரில் இருப்பவர்களுக்கு வர வேண்டும். அது அவள் பழகும் அழகு.
ஒரு பெண்ணுடன் பேசும்போது அவளின் பண்பு, அவளின் அன்பு, அவளின் அறிவு, அவளின் ஆளுமை என ஒரு படிமம் உருவாகுமே, அது தான் மொத்த அழகு!
மழை நேரத்தில் நீர்த்துளிகள் ஒன்று சேர்ந்து சிறு ஓடை உருவாவது போல, அவளைப் பற்றிய சம்பவங்கள் ஒன்று சேர்ந்து நம் மனதை நனைக்க வேண்டும். அப்படி ஈர நினைவுகளை உண்டாகும் ஒவ்வொரு பெண்ணுமே அழகிதான்!
நுணுக்கமாக உருவாக்கப்பட்ட மிக அழகிய சிற்பம் நம்மை வசீகரித்தாலும், சில நிமிடங்களில் அலுத்துவிடும். காரணம் அது நம்மோடு எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. உணர்வுகளை வெளிப்படுத்தாத பெண்ணும் அப்படித்தான்...எத்தனை அழகியாக இருந்தாலும், அவள் ஒரு சிற்பம் மட்டுமே!.
அழகு வழியும் பெண்கள் பலரைப் பார்த்து இருக்கிறேன். அவர்களையே ஓர் ஒளிப்பதிவாளராக கேமராவின் வழியே பார்க்கும்போது மிகச் சாதாரணமாகத் தெரிவார்கள். எங்கே சென்று ஒளிந்து கொள்கிறது அவர்களின் அழகு?. மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்து, கருவிகளின் உதவியால் பேரழகாக மாறும் பெண்களும் இருக்கிறார்கள். எங்கிருந்து ஒட்டிக் கொள்கிறது அந்த புது அழகு?.
எந்தப் பெண்ணும் நிரந்தர அழகி அல்ல என்பது கோணம் உணர்த்தும் பாடம். இறந்து பத்து ஆண்டுகள் ஆனாலும், இன்னும் நினைவில் நிற்கிறார் டயானா. அவரின் அழகு எது?. உரிமைகளுக்காகப் போராடிய டயானா, உரிமைகள் கிடைத்தப் பிறகு, தனிப்பட்ட வாழ்வில் தவறுகள் செய்ய ஆரம்பித்தார். ஆனால் அதை ஒரு நாளும் மறைத்ததில்லை. 'இந்த வாழ்க்கை எனக்குத் தேவை' என்று எல்லோருக்கும் அறிவித்தார். அதுதான் இன்று வரை அவரை மக்களின் இளவரசியாக வைத்திருக்கிறது.
பல பெண்கள் ரசனையாக உருவாக்கப்பட்ட ஒரு கண்ணாடியைப் போல இருக்கிறார்கள். துன்பம் வரும்போது உடைந்து விழுகிறார்கள். மாறாக, எதிர்த்து நிற்பவளே அழகி. தவறுகளை ஒப்புக்கொள்கிற, நம்புபவர்களுக்கு வெளிப்படையாக நடக்கிற, விழுந்த பின்பும் எழுந்து நிற்கிற எந்தப் பெண்ணும், எக்காலத்துக்கும் அழகிதான்!!!!
- ராஜுவ் மேனன்
Courtesy - Vikatan.com
Friday, September 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment